நேரம் மிச்சமில்லை

அம்மாவின் கருவில் இனியும்
தங்கியிருக்காதே
என் சின்ன குழந்தையே
விரைந்து வா

உனக்காக ஏங்குகிறேன் என்பதற்காக அல்ல
இங்கு போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்காகதான்

நீ பார்க்க வேண்டும் என்று நான்
விரும்பிய தேசத்தை
நீ பார்க்காமல் போய்விடுவாய்
என்கிற பயம் எனக்கு.

உனது தேசம் நிலமல்ல
நமது விதியை முன்பறிந்து மரித்த
கடலும் அல்ல:

அது உன் மக்கள்
குண்டுகள் அதை உருக்குலைப்பதற்கு முன்பு
வந்து அதைப் பார்

விட்டுச் சென்றவர்கள் எல்லாம் அழகானவர்கள்
கள்ளங்கபடமற்றவர்கள் என்பதை
நீ தெரிந்து கொள்வதற்கு
நான் மிச்சங்களை சேகரிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறேன்

ஒவ்வொரு சோதனையின் போதும்
இறந்தவர்களுக்கான உறைபதனிகளிலிருந்து
அவர்கள் உன்னைப் போலவே இருந்த
அவர்களது குழந்தைகளை
வாழ்நாள் முழுவதும்
அனாதைகளாக வெளியேறவென
தப்பிக்கவிட்டார்கள்

நீ தாமதமாக வந்தால் என்னை
நம்ப மாட்டாய்
இது மனிதர்களற்ற ஒரு நிலம் என்று
நீ நம்பலாம்
நாங்கள் இங்கு உண்மையில் இருந்திருக்கவில்லை
என்றும்.

இரண்டு முறை நாடுகடுத்தப்பட்டோம்
பின்னர் அதிர்ஷ்டம் கெட்டதாக மாறிய பிறகும்
நம்பிக்கை சாம்பல் நிறமான பிறகும்

எழுபத்தி ஐந்து வருடங்களாக
எங்கள் அதிர்ஷ்டத்துக்கு எதிராக
கலகம் செய்தோம்
இந்த சுமை மிகவும் கனமானது

உன்னால் தாங்க முடியாததென்று எனக்குத் தெரியும்.
பிரசவிக்கக் காத்திருக்கும் ஒரு மானைப் போல
பின்னால் குழியில்
பாயக் காத்திருக்கும் கழுதைப் புலிகள் பற்றிய
அச்சம் எனக்கிருக்கிறது
என்னை மன்னித்துவிடு.

விரைந்து வா
பின்னர் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு தூரம் செல்
காரணம்,
குற்றவுணர்வு என்னை
அலைகழிக்காமல் இருக்க வேண்டும்.

நேற்றிரவு, விரக்தி என்னை சோர்வடையச் செய்தது
அமைதியாய் இரு, என்று சொன்னேன்.

அவனிடம் அதற்கு என்ன வேலை?
என் சின்னக் குழந்தை, தென்றலின் பிள்ளை,
புயலுக்கு அவனிடம் என்ன வேலை?

ஆனால் இன்று
நான் முக்கிய செய்திகளை சுமந்து கொண்டு
திரும்பி வர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன்

காஸாவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையின் மீது
அவர்கள் குண்டுகளை வீசினார்கள்
கொல்லப்பட்ட 500 பேரில் ஒரு சிறுவனும் இருந்தான்
பாதி தலை வெடித்து, கண்கள் திறந்து
அவன் சகோதரனிடம் கேட்கிறான்
“என் சகோதரனே! உன்னால் என்னைப் பார்க்க முடிகிறதா?”

அவன் அவனைப் பார்க்கவில்லை
இரண்டு மணி நேரம் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு
அவனையும் மறந்து அவன் சகோதரனையும் மறந்து
தூங்கச் சென்ற இந்த பரபரப்பான உலகைப் போல.

உன்னிடம் நான் இப்போது என்ன சொல்ல
பேரழிவும் பிரளயமும் சகோதரிகள்
கோபமும் ஆத்திரமுமாக அவை என்னை தாக்குகின்றன
என் உதடுகள் நடுங்கும் வரை
அதிலிருந்து பிணம் என்பதற்கான
அனைத்து வார்த்தைகளும் உதிரும் வரை.

போரின் போது எந்த கவிஞரையும் நம்பாதே
அவர் ஆமையைப் போல மெதுவானவர்
முயல் போல ஓடிக்கொண்டிருக்கும்
படுகொலைகளுடன் போட்டி போட
வீண் முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்

ஆமை ஊர்ந்து செல்கிறது
முயலோ ஒரு குற்றத்திலிருந்து
இன்னொரு குற்றத்துக்கு
மரபுவழித் திருச்சபை வரை
குதித்துச் செல்கிறது

இடிந்து விழுந்துவிட்ட ஒரு மசூதியிலிருந்து
இப்போது வெளியேறிய கடவுளின்
முன்னால் இப்போது குண்டுகள் வீசப்படுகின்றன
ரட்சிப்பவரின் பரிசுத்தமான இடத்தில்
அவர்கள் குறி வைத்து தாக்கினார்கள்

பரலோகத்தில் இருக்கும் நம் பரமபிதா
உண்மையில் ஒரு விமானம்

தனியாக இருக்கும் ஒன்று
துணை எதுவும் இன்றி

எங்கள் மீது குண்டு
வீச வருபவரை தவிர.

ஆனால் குறி வைக்கப்பட்டதென்னவோ
எங்களின் அடிபணிதல்தான்.

என் குழந்தையே, சிலுவையில் இப்போது
எல்லா இறைவாக்கினருக்கும் இடமிருக்கிறது.

கடவுளுக்கு எல்லாம் தெரியும்
ஆனால் உனக்கும் உன்னைப் போன்ற
எதுவுமறியாத கருக்களுக்கும்
இன்னும் எதுவும் தெரியவில்லை


Tamil translation Marwan Makhoul’s poem, New Gaza, by Kavitha Muralidharan